சென்னை ,ஜூலை 15:
கேரள மாநிலத்தில் மீண்டும் நிபா வைரஸ் பரவலால் 2 பேர் உயிரிழந்ததையடுத்து, தமிழக-கேரள எல்லைகளில் கூறற்ற அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் ஆண்டுதோறும் சீசன் பயன்படுத்தி நிபா வைரஸ் பரவல் ஏற்படுவது வழக்கம். இந்த ஆண்டும் அதேபோன்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே குமரமபுத்தூர் பகுதியை சேர்ந்த 58 வயது நபர் ஒருவர், பல நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாமல், மஞ்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதனைத் தொடர்ந்து, நிபா வைரஸ் பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநில சுகாதாரத்துறை நிபா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்நிலை தமிழகத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகிறது. நாடு காணி, தாளூர் உள்ளிட்ட 8 இடங்களில் சுகாதார ஆய்வுப் புள்ளிகள் அமைக்கப்பட்டு, கேரளாவில் இருந்து வருபவர்கள் மீது உடல் வெப்ப பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நிபா வைரஸால் ஏற்படும் ஆபத்து குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பாதிப்பு அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனை மற்றும் பரிசோதனை மையங்களை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.