ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை என பல்வேறு பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதில் பீக் ஹவர்ஸில் அதிகக் கட்டணமும், தேவை குறைவான நேரங்களில் குறைவான கட்டணங்களும் வசூலிக்கப்பட்டு வந்தன. இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பிற நேரங்களில் குறைவான கட்டணம் இருப்பதால் மற்றொரு தரப்பினர் ஆதரவாகவும் கருத்துகளை கூறி வந்தனர்.
இந்நிலையில் வாடகை வாகன நிறுவனங்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், ஓலா, ஊபர் நிறுவனங்கள் பீக் ஹவர்ஸ் நேரங்களில் கட்டணம் வசூலிப்பதற்கான உச்சவரம்பு 1.5 மடங்காக இருந்த நிலையில், தற்போது 2 மடங்காக மத்திய அரசு உயர்த்தியுள்ளது
மேலும், சரியான காரணமின்றி பயணம் ரத்து செய்யப்பட்டால், ஓட்டுநர்களிடம் இருந்து அதற்கான கட்டணத்தின் 10 சதவிகிதம் (அதிகபட்சம் ரூ.100) வரை டிரைவர்களுக்கு அபராதமாக விதிக்கப்படும். அதேபோல் சரியான காரணமின்றி பயணிகள் பயணத்தை ரத்து செய்தாலும் இதே அபராத கட்டணம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்த புதிய வழிகாட்டுதல்களை அடுத்த மூன்று மாதங்களில் ஏற்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனுடன், டிரைவர்களுக்கு வழங்கப்படும் கட்டணப் பகிர்வு மற்றும் ஊக்கத் தொகைகள் மாநில அரசின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும். இது ஓலா, ஊபர் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.