எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்

MLA Sengottaiyan resigns from his post

சென்னை, நவம்பர் 26:

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். கோபிசெட்டிப்பாளையம் தொகுதியைத் தலைமையிடமாகக் கொண்ட அவர், நீண்ட காலம் அதிமுகவில் முக்கிய தலைவராக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் செங்கோட்டையன் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்று, சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவுவை நேரில் சந்தித்து தனது எம்.எல்.ஏ. பதவிக்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதன் மூலம் 2021ல் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் வெற்றி பெற்று வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவர் விலகியுள்ளார்.

இதற்கு முன் ஆலங்குளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தற்போது செங்கோட்டையனும் விலகியதால் சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. இதனால் எதிர்க்கட்சியான அதிமுக வலிமை எண் குறைவது, அக்கட்சியின் அரசியல் நிலைப்பாட்டில் மேலும் மாற்றங்களை உருவாக்கக்கூடும் என்று கூறுகின்றனர்.

தமிழக அரசியலில் செங்கோட்டையன் இடம்: முதன்முதலாக 1977 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட செங்கோட்டையன், பின்னர் எட்டு முறை தொடர்ந்து கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் இருந்து வெற்றிபெற்று, மொத்தம் ஒன்பது முறை எம்.எல்.ஏ. ஆனவர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார். அதிமுக ஆட்சிக்காலங்களில் வனத்துறை, போக்குவரத்து, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், வருவாய் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் அமைச்சராக பணியாற்றியவர் என்றும், கொங்கு மண்டல வாக்குகளை ஒருங்கிணைக்கும் தலைவராகவும் அவர் அடையாளப்படுத்தப்பட்டார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்த செங்கோட்டையன், அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும், கட்சி ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தி வந்தார். இதனால் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு தீவிரமடைந்து, முதலில் கட்சி பதவிகளில் இருந்து, பின்னர் கட்சியிலிருந்தே செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், தனது அடுத்த கட்ட அரசியல் பாதை குறித்து வெளிப்படையாக பேசாமல் இருந்த செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய கட்சியில் அவருக்கு ஒருங்கிணைப்பு பொதுச் செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகள் அளிக்கப்படலாம் என்ற செய்திகளும் பரவி வருகின்றன.

சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு முன்பு, தவெகவில் இணையப்போகிறீர்களா என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, “ஒரு நாள் பொறுத்திருங்கள்” என்று செங்கோட்டையன் பதிலளித்ததாக கூறப்படுகிறது.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!