சென்னை, ஆகஸ்ட் 18:
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு மற்றும் பீகார் மாநில தேர்தல் நெருங்கும் நேரத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் என்று கூறி 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதையடுத்து தேர்தல் ஆணையம் தொடர்ந்த சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது, தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுப்பதாகவும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அரசியமைப்பை அவமானப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார். மேலும், தேர்தலின் போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது எதிர்க்கட்சிகள் குற்றம்சட்டடுவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், நேற்றைய தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர்கள் சந்திப்பை விமர்சித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 7 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு.
பின்வரும் கேள்விகள் எழுகின்றன:
1.வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?
2.புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?
3.Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?
4.பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?
5.01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?
6.வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?
7.“நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் – வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே? என்று தெரிவித்துள்ளார்.