சென்னை, ஆகஸ்ட் 16:
கீழே விழுந்ததால் தலையில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இல. கணேசன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் நேரு மற்றும் மா. சுப்பிரமணியனும் உடன் உள்ளனர்.
இதற்கு முன், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி இல. கணேசன் இல்லத்திற்கு சென்று அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து இல. கணேசனின் உடல் நாளை மாலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.