சென்னை, செப்டம்பர் 10:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டார். அப்போது ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையினால் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர். பாலகிருஷ்ணன் (ஓய்வு), இயக்குநர்கள் பிரகாஷ் மற்றும் சுந்தர் ஆகியோருக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.
பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகளுடன் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட அரிய தமிழ் நூல்களைச் சேர்ந்த கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை நூலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் 1.9.2025 அன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமாக விளங்கும் ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழக தமிழ்த்துறை, தமிழ்நாடு அரசின் தொடர்ச்சியான ஆதரவுடன் இயங்கிக்கொண்டிருப்பதாகும். தமிழக அரசு சார்பில் 7.7.2021 அன்று 1 கோடி 25 லட்சம் ரூபாய் உடனடியாக கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்கு வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.