சென்னை, ஜூலை 10:
சட்டத்தின்படியே அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று எடப்பாடி பழனிசாமிக்கு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் ஒரு சிலரை மகிழ்ச்சிப்படுத்தவே பழனிசாமி இப்படி பேசி வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார். கோயில் நிதியில் கல்வி நிலையங்களை நிறுவுவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறையில் இருந்ததுதான் என்று அவர் தெரிவித்துள்ளார். அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் ஏழை, எளிய மாணவர்கள்தான் கல்வி பயின்று வருகின்றனர் என்றும் அவர் கூறினார். அறநிலையத் துறை சட்டப்படி கல்வி நிலையங்களை தொடங்கலாம் என்றும், அதன்படியே கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கல்வி பணியை திமுக அரசு செம்மையாக செய்து கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். மேலும் ஒரு சிலரை மகிழ்ச்சிப்படுத்தவே எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என்று தெரிவித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு, வரலாறு தெரியாமல், சிலர் சொல்வதை கேட்டு, பா.ஜ.க.,வின் ஊதுகுழலாகவே மாறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி என்று விமர்சித்தார்