சென்னை, ஜூலை 26:
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மத்திய தொல்லியல்துறை சார்பாக மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் ஆடி திருவாதிரை நிறைவு நாளுக்கான முப்பெரும் விழா நாளை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதையொட்டி, பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று இரவு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றபின், இரவு 10:30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு செல்கிறார்.
திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் உடன் இருப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரத்தில், பிரதமரை சந்திக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி கிடைக்கவில்லையென்றும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த முக்கியமான சந்திப்பு அரசியல் சூழலில் பெரும் கவனம் பெறும் வாய்ப்பு உள்ளது. இது தமிழக அரசியல் களத்தில் முக்கிய சந்திப்பாக இருக்கக்கூடும் என எதிர்பாக்கப்படுகிறது.