வேலூர், டிசம்பர் 19:
பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணத்தின்” ஒரு பகுதியாக கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சந்தைமேட்டில் விவசாயிகள் மற்றும் மத்திய அரசு திட்டத்தால் பயணடைந்த பயனாளிகளை கிராம சபை மூலம் சந்தித்து பேசினார். இதில் சுமார் 300 பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பேசுகையில், வேலூர் மாவட்டத்தில் மா விளைச்சல் அதிகம் இருந்தும் போதிய விலை இல்லை, இதற்கு ஆந்திர அரசு வழங்குவது போல் மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கே.வி.குப்பத்தில் மாம்பழ கூழ் தொழிற்சாலை அமைக்கவும். வேலூரின் தாயான பாலாறு பாலாகி வருவதை தடுக்கவும், மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியாத்தத்தில் கேவை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வேலூர் மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி சுத்தமாக இல்லை. இதனால் வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. அதை தவிர்க்க தொழிற்சாலைகளை கொண்டு வர வேண்டும் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், தேவர்களுக்கு நிறைய கஷ்டத்தை கொடுத்தது அசுரர்கள். ஒரு கட்டத்தில் அவர்களை தேவர்கள் அளித்தார்கள். அது போல தமிழகத்தில் உள்ள அசுரர்களை அகற்ற வேண்டும். என்னோட பிரச்சார பயணம் ஜனவரி 9 ல் முடியும் போது அதற்கான முடிவு தெரியும். என்னோட பயண முடிவில் எடப்பாடி கலந்துகொள்கிறார்.
ஒரு தொகுதிக்கு 4 பெயரா? இது கே.வி.குப்பம் தொகுதி என்றார்கள். கூகுலில் பார்த்தால் கீழ் வழித்துணையான் குப்பம் என உள்ளது, இன்னொரு இடத்தில் கீழ் வைத்தினாங்குப்பம் என உள்ளது, இங்குள்ளவர்கள் கே.வி.குப்பம், கீ.வா.குப்பம் என சொல்கிறார்கள். நான் தமிழில் கீ.வா.குப்பம் என்றே வைத்துக்கொள்கிறேன்.
“2026 ல் NDA கூட்டணி ஆட்சி அமைத்த உடனேயே மாங்காய்க்கு ஆதரவு விலையும் கிடைக்கும், மாம்பழ கூழ் தொழிற்சாலையும் கிடைக்கும்” குடியாத்ததில் இரயில் நின்று செல்ல அடுத்த 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
மு.க.ஸ்டாலின் எனக்கும் முதலமைச்சர் தான், மக்களுக்கும் அவர் தான் முதலமைச்சர் ஆனால் மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் உதயநிதியை முதலமைச்சராக்குவதிலேயே நோக்கமாக உள்ளார். நான் எங்கு சென்றாலும் செய்தியாளர்கள் உங்க கூட்டணி பலமா இருக்கா? என கேட்கிறார்கள். இதே கேள்வியை முதலமைச்சரிடம் ஏன் கேட்க மாட்டேங்குறாங்க. அங்குள்ள காங்கிரஸ் வேறு கூட்டணிக்கு போவதாக சொல்கிறார்கள். அதையெல்லாம் கேட்காமல் என்னை மட்டும் கேட்பதில் என்ன சூழ்ச்சமம் உள்ளது என்பதை செய்தியாளர்கள் விளக்க வேண்டும்.
2026 NDA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் வேலூரில் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
தமிழகம் முழுவதும் தற்போது நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் தான் எம்.ஜி.ஆர் கூட்டுறவு மூலம் இலவச வேட்டி சேலை திட்டத்தை கொண்டு வந்தார். ஒட்டுமொத்த நெசவாளர்களின் கோரிக்கை தேர்தல் முடிந்த பிறகு எங்கள் ஆட்சி நிறைவேற்றும்.
“மகளிர் உரிமை தொகையை ஆட்சிக்கு வந்த உடனேயே கொடுப்போம் என்றார்கள் ஆனால் 30 மாதம் கழித்துதான் கொடுத்தார்கள். அப்படியானால் 30 மாதம் கொடுக்க வேண்டிய நிலுவை தொகை 30 ஆயிரத்தை பெண்கள் கேட்க வேண்டும். மக்கள் சொல்வதை அதிகாரிகள் கேட்பதில்லை அமைச்சர்கள் அதற்கும் மேல் இவை அனைத்திற்கும் பாடம் புகட்ட வேண்டும்.
“புதியதாக கட்சி ஆரம்பித்து நிறைய பேர் வருவார்கள், எல்லாம் நாங்கள் செய்கிறோம் என வருவார்கள், உங்கள் ஓட்டு வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பலர் கட்சி ஆரம்பித்து காணாமல் போய் உள்ளார்கள். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.” இனி உங்களுக்கு 125 நாளும் வேலை கிடைக்கும் வாரம் முழுவதும் சம்பளம் கிடைக்கும் யாரும் கவலைப்பட வேண்டாம்.
பொங்கலுக்கு ஐந்தாயிரம் கொடுக்க வேண்டும் என எங்கள் கூட்டணி சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் அவர்கள் 10,000 கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள் அதை வாங்கிக் கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.