திருவண்ணாமலை, டிசம்பர் 03 :
அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரபலமான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 29-ஆம் தேதி வெள்ளித் தேரும், 30-ஆம் தேதி மகாத் தேரும் வெகு விமர்சையாக நடைபெற்றன. 10-வது நாளான இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டு, மாலை மகாதீப பெருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் அர்த்தமண்டபத்தில் யாகத்தில் இருந்து சிவாச்சாரியார்கள் பரணி தீபத்தை ஏற்றினர். அது வைகுண்ட வாசல் வழியாக மகாதீப மலைக்கு காட்டப்பட்டு, பஞ்சபூதங்களைக் குறிக்கும் ஐந்து விளக்குகளில் தீயக்கப்பட்டது. ஒவ்வொரு சன்னதியிலும் தீபாராதனை நடத்தி, உண்ணாமலை அம்மன் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா” என்று கோஷித்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணி அளவில் அண்ணாமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார். இதே நேரத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்படும். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும். பரணி தீபத்தை முன்னிட்டு 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் பக்தர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.
இந்த விழாவை முன்னிட்டு சம்பந்த விநாயகருக்கு இன்று தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் பரணி தீபம் ஏற்றப்பட்டதையடுத்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் இன்று அதிகாலை வரை மழை பெய்ததால் காலையில் பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருந்தது. கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
24 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 4764 சிறப்பு பேருந்துக்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது. இதேபோல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 130 இடங்களில் கார் நிறுத்த இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஆந்திர முன்னாள் அமைச்சர் நடிகை ரோஜா, நீதியரசர் மகாதேவன், ஐ.ஜி. அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி.தர்மராஜன், மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், கோவில் தக்கார் மீனாட்சி சுந்தரம், டாக்டர் சேஷாத்ரி, அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர் டாக்டர் பழனி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கொட்டும் பனி மற்றும் சாரல் மழையிலும் பரணி தீப தரிசனம் கண்டு மனம் உருக வழிபட்டனர்.
வழக்கத்தைவிட இந்த ஆண்டு தீபத்திருவிழா கூடுதல் உற்சாகத்துடன் நடக்கிறது. இதுவரை எந்த ஆண்டும் இல்லாத அளவில் மகா தீபத்தை தரிசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மகா தீபத்தை தரிசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.