மதுரை, ஆகஸ்ட் 9:
தென்திருப்பதி என்று போற்றப்படும் மதுரை திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவிலில் ஆடி திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழாவுடன் ஆடி மாதத் திருவிழாவாலும் பிரசித்தி பெற்றது. இந்தாண்டுக்காண ஆடி திருவிழா ஆகஸ்ட் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அன்னம், சிம்மம், அனுமன், கருடன், யானை, வாகனங்களிலும், மறவர் மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற்றது.
இன்று, திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளிய கள்ளழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இன்றிரவு புஷ்பப் பல்லக்கு மற்றும் சந்தனம் சாத்துபடி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மேலும் நாளை தீர்த்தவாரி நடைபெறும். ஆகஸ்ட் 11-ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் ஆடி திருவிழா நிறைவு பெறும்.