நாமக்கல், அக்டோபர் 09:
தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்குவதை கோரி வலியுறுத்துகின்றனர். இதனால் ஐந்து தென் மாநிலங்களிலும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
நாமக்கலில் நடைபெற்ற அவசர பொதுக்குழு கூட்டத்தில் சங்கத் தலைவர் எஸ்எல்எஸ் சுந்தர்ராஜன் தலைமையில், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரிய ஆதரவளித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆயில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்காமல் உள்ளதை கண்டித்து கேள்விகள் எழுப்பினர்.
தொடர்ந்து, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா, தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் எஸ்.எல்.எஸ். சுந்தர்ராஜன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகம் புதுச்சேரி, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கி தென் மண்டலத்தில் சுமார் 5,500 டேங்கர் லாரிகள் உள்ளன. பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியவற்றுக்கு துறைமுகத்திலிருந்து எரிவாயு எடுத்துச் செல்லும் பணியை இந்த லாரிகள் மேற்கொண்டு வருகின்றன.
2025-30 ஆம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன. மார்ச் மாதம் புதிய விதிமுறைகளை தளர்த்தக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டதால் அப்போது போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் 3,500 டேங்கர் லாரிகளுக்கு ஆயில் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில், 2,800 டேங்கருக்கு மட்டுமே ஆயில் நிறுவனங்கள் அனுமதி வழங்கி உள்ளன. மீதமுள்ள டேங்கர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.