திருநெல்வேலி: ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் சுர்ஜித் மற்றும் அவரது தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு இருவரது சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27-ம் தேதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் காதலியின் தம்பி சுர்ஜித் கைது செய்யப்பட்டு, அவரது தந்தை சரவணன் மற்றும் தாய் கிருஷ்ணகுமாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஜூலை 30-ஆம் தேதி சரவணனுக்கு ஆகஸ்ட் 8-ம் தேதி வரை, சுர்ஜித்துக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகுமாரி ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் சிபிசிஐடி காவலில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்றம், இச்சம்பவத்திற்கான இறுதி அறிக்கையை 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. இதனிடையில் சிபிசிஐடி காவல் துணைக்கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர், திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் சுர்ஜித் மற்றும் சரவணனை காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க சுர்ஜித் மற்றும் சரவணன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வருகின்ற 11ஆம் தேதி வழக்கு விசாரணை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சுர்ஜித் மற்றும் எஸ்ஐ சரவணன் ஆகிய இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர்.