சென்னை, அக்டோபர் 15:
கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அரசு முன்னெடுத்த கவனக்குறைவுகளையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி சட்டப்பேரவை கூட்டத்தில் விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை அரசு முன்கூட்டியே தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தால், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். கரூருக்கு முன்னதாக 4 மாவட்டங்களில் விஜய் பிரசாரம் செய்திருந்தார்.
அப்போது கூடிய கூட்டத்தை வைத்து கரூரில் எவ்வளவு பேர் கூடுவார்கள் என்று காவல்துறையும் உளவுத்துறையும் அரசுக்கு எண்ணிக்கை அளித்திருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு வழங்கியிருந்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும்.
வேலுச்சாமிபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று அதிமுக கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவுக்கு அந்த பகுதியில் அனுமதி அளித்தது ஏன்? இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி?, உடற்கூராய்வு செய்ய அவசரம் காட்டியது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்து மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், “கரூருக்கு பிற பகுதியில் இருந்து மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். 39 உடல்களை 25 பேர் கொண்ட மருத்துவக் குழு மூலம் உடற்கூராய்வு செய்யப்பட்டது” என்றார்.