கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: மின்வாரிய அதிகாரிகள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

TVK stampede case: Documents transferred to Trichy court!

சென்னை, நவம்பர் 10:

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தும், 110 பேர் காயமடைந்தும் இருந்தனர். அந்த துயரச் சம்பவத்திற்கான விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் இதுவரை பல்வேறு துறைகள் சார்ந்த அதிகாரிகள், சாட்சியர்கள் மற்றும் சம்பவ இடத்தில் சேவையில் ஈடுபட்டவர்களிடம் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. அந்த வரிசையில், கூட்டநெரிசல் நடைபெற்றபோது அங்கு இருந்த ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர்களுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும் ஏற்கெனவே சிபிஐ சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது. இதுவரை 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் சார்ந்த நபர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னையின் பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரண் மீதும் கடந்த இரண்டு தினங்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், நிகழ்ச்சியின் போது மின்சாரம் தடைப்பட்டதே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என எழுந்த குற்றச்சாட்டையடுத்து மின்வாரிய அதிகாரிகளுக்கும் சிபிஐ விசாரணை அழைப்பு அனுப்பியிருந்தது.

அதன்படி, திங்கள்கிழமை காலை 10.15 மணிக்கு இந்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய பொதுத் துறை நிறுவனமான ‘பவர் கிரிட்’ (Power Grid Corporation) நிறுவனத்தின் சென்னை அலுவலகத்திலுள்ள இரண்டு அதிகாரிகள் கரூருக்கு வந்தனர். அவர்கள், சிபிஐ அதிகாரிகள் தங்கி விசாரணை நடத்தி வரும் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் ஆஜராகி, விசாரணைக்கு பதிலளித்தனர்.

சிபிஐ விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் சம்பந்தப்பட்ட சில அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப அதிகாரிகளையும் அடுத்த கட்டமாக அழைத்து விசாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!