சென்னை, செப்டம்பர் 30:
கரூரில் தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தவெக தலைவர் விஜய் இது தொடர்பாக தனது உணர்வுகளை வெளிப்படுத்திய விடியோவை வெளியிட்டுள்ளார்.
விடியோவில்,விஜய் சொல்லியிருப்பது என்னவென்றால், வாழ்க்கையில் இதுபோன்ற வலி மிகுந்த தருணத்தை நான் உணர்ந்ததேயில்லை. என்னுடைய சுற்றுப் பயணங்களின்போது, மக்கள் என்னைப் பார்க்க வருவதற்கு ஒரே காரணம் அன்பும் பாசமும்தான்.
என்னுடைய வலிகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மற்றக் கட்சித் தலைவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
மக்களின் பாதுகாப்பே முக்கியம். இனி பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பேன். மற்ற அனைத்து விஷயங்களையும் தாண்டி பாதுகாப்புதான் முக்கியம் என்பது எனது மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. எனவே, மக்கள் பாதுகாப்பான இடங்களை மட்டுமே இனி தேர்வு செய்து அந்த இடங்களில் மட்டும் பிரசாரம் செய்ய அனுமதி கேட்கப்படும்.
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன்தானே, அங்கு இப்படி மக்கள் இறந்துகொண்டிருக்கும்போது எப்படி ஊரை விட்டு வர முடியும். திரும்ப அங்கு போக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இதனைக் காரணம் காட்டி அங்கு வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக கரூர் செல்லவில்லை.
இந்த நேரத்தில், சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும் தெரியும், இந்த இழப்புக்கு எது சொன்னாலும் எதுவும் ஈடு இணையாகாது என்று எனக்குத் தெரியும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் விரைவாக குணமாகி வீடு திரும்ப வேண்டும்.
5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் சந்திப்பேன். கரூரில் பாதிக்கப்பட்ட மக்கள் உண்மைகளை எல்லாம் சொல்லும்போது, கடவுளே நேரில் வந்து உண்மைகளை சொல்வது போல் இருந்தது. நிச்சயம் விரைவில் உண்மைகள் அனைத்தும் வெளியே வரும்.
பதற்றமான சூழ்நிலை தவிர்க்கவே கரூர் செல்லவில்லை என விஜய் விளக்கம் அளித்துள்ளார். சூழலை புரிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த தலைவர்களுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.