சென்னை, ஆகஸ்ட் 07:
மறைந்த தி.மு.க. தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நினைவு நாளையொட்டி, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தை தொடங்கி வைத்து அதன் இலச்சினையை வெளியிட்டார். அதை நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார்.
அதன் பிறகு, திராவிட இயக்க இளம் ஆய்வாளர்களை கண்டறிந்து, அவர்களை வளர்த்து ஊக்குவிக்கும் விதமாக “கலைஞர் நிதிநல்கை” திட்டத்தையும் தொடங்கி வைத்தார் இந்த திட்டத்தின் மூலம், இளம் ஆய்வாளர்கள் 15 பேருக்கு ஆண்டுக்கு தலா ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படும். இதன் இலச்சினையை திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசு பெற்றுக்கொண்டார்.
மேலும், முத்தமிழறிஞர் பதிப்பகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும், தி.மு.க வரலாறு, இளைய திராவிடம் எழுகிறது உள்ளிட்ட 8 புத்தகங்களை முதல்வர் வெளியிட்டார். அத்துடன், கருணாநிதி குறித்த சிறப்பு காணொலியும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி , எம்.பி., ஐ.பெரியசாமி மற்றும் புத்தக எழுத்தாளர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.