சென்னை, அக்டோபர் 30:
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். ஏழு மாத கர்ப்பிணியாக உள்ள தன்னிடம் மருத்துவம், வீட்டு செலவு உள்ளிட்ட மாதாந்திர தேவைகளுக்காக ரூ.6.50 லட்சம் பராமரிப்பு தொகை வழங்க ரங்கராஜுக்கு உத்தரவிட நீதிமன்றத்திடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக குற்றஞ்சாட்டி புகார் அளித்திருந்தார். அந்த வழக்கு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்காக நிலுவையில் உள்ளது.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தனது மனுவில், “தான் தற்போது கர்ப்பத்தின் ஏழாவது மாதத்தில் இருக்கிறார். இதனால் தொழிலில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளேன். எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜே தந்தை. எனவே, மருத்துவ செலவு மற்றும் அடிப்படை வாழ்வுச் செலவுகளுக்காக மாதம் ரூ.6.50 லட்சம் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்,” என்று ஜாய் கிரிசில்டா குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.