பீகார், நவம்பர் 14:
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கொலை வழக்கில் சிறையில் இருந்த ஐக்கிய ஜனதா தள (ஜே.டி.யூ) வேட்பாளர் அனந்த் குமார் சிங் அபார வெற்றியைப் பெற்றுள்ளார்.
மாலை 4 மணி நிலவரப்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) 204 தொகுதிகளில் முன்னிலையுடன் வலுவான நிலைப்பாட்டை பெற்றுள்ளது. மேலும் 5 தொகுதிகளில் வெற்றி பதிவாகியுள்ளது. அதேவேளையில், மகாகத்பந்தன் கூட்டணி 27 தொகுதிகளிலும், சுயேட்சை மற்றும் பிற கட்சிகள் 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றன.
சர்ச்சைக்குரிய முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் ஜே.டி.யூ வேட்பாளரான அனந்த் குமார் சிங், மொகாமா தொகுதியில் 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 26 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அனந்த் சிங் 91,416 வாக்குகள் பெற்றார். அவருடைய எதிராளி, ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) வேட்பாளர் வீணா தேவி 63,210 வாக்குகள் பெற்றார்.
இந்த வெற்றி, குற்றச்சாட்டு சூழ்நிலையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற புதுமையான சம்பவமாக அமைந்துள்ளது.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சித் தொண்டர் துலர்சந்த் யாதவ் கொலை வழக்கில், அனந்த் சிங் பெயர் மோதியிருந்தது. இந்த வழக்கில் பாட்ட்னா காவல் துறை அதிகாரிகள் நவம்பர் 1 ஆம் தேதி இரவு அவரை கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
சிறையில் இருந்தபடியே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அனந்த் சிங் குறித்து, பிகார் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
மொகாமா பகுதியில் பிரபலமான தாதாவாகக் கருதப்படும் அனந்த் சிங், முன்னதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தில் இருந்து எம்.எல்.ஏ.வாக இருந்தவர். பின்னர் கட்சியை விட்டு ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார். தற்போது அவரது மனைவி நீலம் தேவி மொகாமா தொகுதியின் எம்.எல்.ஏ.வாகச் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனந்த் சிங்கின் வெற்றி, குற்றச்சாட்டு மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகிய இரு மையங்களுமே பீகார் அரசியலில் எவ்வளவு வேரூன்றியுள்ளன என்பதற்கான உதாரணமாக மதிக்கப்படுகிறது.