புதுடெல்லி, ஜூலை 22:
இந்திய துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியிலிருந்து திடீரென நேற்று இரவு ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா கடிதம் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், மக்களவையும் மாநிலங்களவையும் எதிர்க்கட்சிச் உறுப்பினர்கள் அமளியாக்கியிருந்தனர். இத்தகைய சூழலில், துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் விலகுவது எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது. அவரது திடீர் முடிவு குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பியுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் முதன்மை செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “அவரது ராஜினாமா புரிந்துகொள்ள முடியாத அதிர்ச்சி, இன்று நீதித்துறையைப் பற்றிய முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட இருந்தார்,” என விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதி துணை பதவிக்கான அடுத்த நபர் தேர்வு குறித்து மத்திய அமைச்சர்கள் உடனடியாக அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் ராஜ்நாத் சிங், அமித்ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமைச்சர் சிவராஜ்சவுகான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர். புதிய துணை ஜனாதிபதியாக யார் வரக் கூடியதாக உள்ளார் என்பதைக் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் ஜெகதீப் தன்கர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக மாநிலங்களவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தினார்.