நாமக்கல், செப்டம்பர் 27:
திமுக அரசுபோல பொய் வாக்குறுதிகளை அளிக்க மாட்டோம் என்று தவெக தலைவர் விஜய் உறுதியளித்துள்ளார்.நாமக்கலில் தவெக பிரசாரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசுகையில்,
விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தத் தேவையான தீர்வுகளை, உறுதியாக எங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்வோம்.
அடிப்படை சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி, பெண்கள் பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகளைத்தான் என்னிடம் கேட்கின்றனர். இவற்றில் எந்த சமரசமும் இல்லாமல் சரியாகச் செய்யப்படும் என்று சொன்னோம். இதைத்தானே எல்லாரும் சொன்னார்கள்; இவர் புதிதாய் என்ன சொல்லிவிட்டார்?
ஒரு மனிதனுக்கு உணவு, குடிநீர், கல்வி, மருத்துவ வசதி, போக்குவரத்து வசதி, சாலை வசதி, பாதுகாப்பான வாழ்க்கைதான் ஓர் அடிப்படைத் தேவை. என்றைக்கும் இது தேவைதானே. அப்படியென்றால், அதனைச் சொல்வதுதானே சரி.
அதனால்தான், எது நடைமுறைக்கு சாத்தியமோ உண்மையோ அதை மட்டும்தான் சொல்வோம்; அதனைத்தான் செய்வோம். திமுக மாதிரியான பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்க மாட்டோம். செவ்வாய்க் கிரகத்தில் ஐடி கம்பெனிகள், காற்றில் கல் வீடுகள், அமெரிக்காவுக்கு ஒற்றையடிப் பாதை, வீட்டுக்குள்ளேயே விமானம் ஓட்டப்படும் என்று முதல்வர்போல அடித்து விடுவோமா?
ஏற்கெனவே சொன்னதுபோலத்தான், இந்த பாசிச பாஜகவோடு நாங்கள் ஒத்துப்போக மாட்டோம். திமுக அரசு மாதிரி, பாஜகவுடன் மறைமுக உறவுக்காரர்களாக இருக்க மாட்டோம்.
மூச்சுக்கு 300 முறை அம்மா அம்மா என்று சொல்லிக்கொண்டு, ஜெயலலிதா சொன்னதை முற்றிலும் மறந்துவிட்டு, தமிழ்நாட்டின் நலனுக்காக என்று ஒரு பொருந்தாக் கூட்டணியை அமைத்தவர்கள் போன்றும் இருக்க மாட்டோம்.
இந்த பாஜக அரசு, தமிழ்நாட்டுக்கு என்ன செய்து விட்டார்கள்? நீட் தேர்வை ஒழித்தார்களா? கல்வி நிதியை முழுவதுமாக கொடுத்தார்களா? தமிழ்நாட்டுக்குத் தேவையான அனைத்தையும் சரியாகச் செய்தார்களா? பிறகு ஏன் இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கின்றனர் என்று தெரிவித்தார்.