சென்னை, ஜூலை 7:
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பர்மிங்ஹாமில் முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்தியா புது வரலாறு படைத்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே இந்திய அணி 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் எடுத்தன. பின்னர் 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 427 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சனிக்கிழமை 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை 5ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி 271 ரன்கள் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணி 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமனிலை வகிக்கின்றன. இரண்டு இன்னிங்சையும் சேர்த்து இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் சிங் 10 விக்கெட்டுகளும், சிராஜ் 7 விக்கெட்டுகளும் எடுத்தனர். கேப்டன் சுப்மன் கில் முதல் இன்னிங்சில் இரட்டை சதம், 2வது இன்னிங்சில் சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.