சென்னை, ஆகஸ்ட் 30 :
தமிழ்நாட்டு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இந்த ஆண்டுக்கான நெல் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், செப்டம்பர் 1-ந்தேதி முதல் சன்னரக நெல்லுக்கு ஒரு குவிண்டால் ₹2,545 மற்றும் பொதுரக நெல்லுக்கு ஒரு குவிண்டால் ₹2,500 என்ற விலையில் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யும் படி அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகைபடி சன்னரகத்திற்கு ₹156, பொதுரகத்திற்கு ₹131 மேல் தொகையும் வழங்கப்படும். கடந்த திமுக தேர்தல் அறிக்கையில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ₹2,500 வழங்கப்படும் என கூறப்பட்ட வாக்குறுதி இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பெருமையுடன் தேர்தல் அறிக்கையை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், 2024-25 நெல் கொள்முதல் பருவத்தில் 47.97 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு ₹44,777.83 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 51 மாதங்களில் மொத்தமாக 1.85 கோடி டன் நெல் விவசாயிகளிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகையாக ₹2,031.29 கோடி வழங்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டிலிருந்து செப்டம்பரில் நெல் கொள்முதல் தொடங்கி வருவது போன்று, இந்த ஆண்டும் செப்டம்பர் 1-ந்தேதி முதல் கொள்முதல் தொடங்கும். அதற்காக ரூ.333.07 கோடி செலவில் கட்டப்பட்ட 26 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் தற்போது பயன்பாடில் உள்ளன.
இந்த ஆண்டில் நெல்வரத்து வரலாறு காணாத வகையில் அதிகமாக இருந்த போதும், திடீர் மழை பெய்ததால், நெல் மணிகள் உடனடியாக பாதுகாக்கப்பட்டதாக அமைச்சர் சக்கரபாணி கூறினார். 2025-26 பருவத்திற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் விரைந்து திறக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நெல் கொள்முதல் மையங்களில் நெல்லை நேரடியாக அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.