மதுரை, ஜூலை 11:
திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் மற்றும் கனிமவள குவாரிகள் தொடர்பான பொதுநல வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் திண்டுக்கல் மாவட்ட கலெக்டரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபால் மதுரை உயர்நீதிம்னறத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது, திண்டுக்கல் மாவட்டத்தில் மணல் குவாரிகளுக்கு எந்தவொரு மாவட்ட நிர்வாக அனுமதியும் வழங்கப்படவில்லை. ஆனால் பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் பகுதிகளில் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஆற்று மணல் மற்றும் கிராவல் மணல் சட்டவிரோதமாக அகற்றப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த வாரம் நீதிபதிகள் திடீர் ஆய்வு செய்த போது சட்டவிரோத குவாரிகளை மூடி ‘சீல்’ வைக்க உத்தரவிட்டனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் குவாரி நடத்துபவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் எனக் கூறினர். இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர், சில குவாரிகள் மூடி சீல் செய்யப்பட்டாலும், பின்பக்கமாக மணல் அள்ளப்படுவதர்கான புகைப்படங்களை நீதிபதியிடம் தாக்கல் செய்தார். இதில் கோபமடைந்த நீதிபதிகள், அதிகாரிகள் கூட்டுச் சதியுடன் இந்த நடவடிக்கைகள் தொடர்கிறதா என கேள்வி எழுப்பினர்.
பின்னர் இந்த குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்பதால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வரும் 16-ம் தேதி நேரில் ஆஜராகி உண்மைகளை விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.