சென்னை, நவம்பர் 18:
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீடு இணைந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது தமிழக அரசியல் கட்சிகளின் வரலாற்றில் முதல்முறையாக இடம்பெற்றுள்ளது என த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்த பதிவில், “த.வெ.க. அமைப்பில் இதுவரை பல்வேறு கட்டங்களாக 3 லட்சம் நிர்வாகப் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் முதல்கட்டமாக 106 மாவட்டங்களுக்குட்பட்ட 214 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 1,280 நகர, ஒன்றிய, பேரூர் கழகங்கள், மேலும் 21,134 கிளை மற்றும் வார்டு அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன,” என தெரிவித்துள்ளார்.
மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 103 நிர்வாகிகளுக்கு இவ்வடையாள அட்டைகள், த.வெ.க. தலைவர் விஜய் அறிவுறுத்தலின் பேரில், குறித்த மாவட்ட செயலாளர்களின் வசம் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.