கமுதி, அக்டோபர் 31:
பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் ஒன்றாக பங்கேற்று, முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழாவிற்கு தர்மர் எம்.பி., முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் முருகன், இளைஞர் அணி செயலாளர் டேவிட் அண்ணாதுரை, கமுதி ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் தேவர் வாழ்ந்த இல்லத்தையும் பார்வையிட்டனர். இதற்கு முன் சசிகலா தேவர் நினைவிடத்தில் மலர் தூவிச் சென்று மரியாதை செலுத்தியிருந்தார். மேலும், தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார். அந்த நேரத்தில் ஓ.பி.எஸ் மற்றும் செங்கோட்டையனும் சசிகலாவை சந்தித்தனர்; இவர்களின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியது.
பின்னர், பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களுடன் பேசினர்.
பன்னீர்செல்வம் கூறுகையில், “தேவரின் புகழ் நிலைத்தது. எங்கள் நோக்கம் அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைப்பதே. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி மீண்டும் தமிழகத்தில் உருவாக வேண்டும் என்று நாம் தேவரின் நினைவிடத்தில் சபதம் எடுத்துள்ளோம்,” என்றார்.
தினகரன் கூறுகையில், “துரோகத்தை வீழ்த்தும் வரை அ.ம.மு.க. அமைதி கொள்ளாது. எம்ஜிஆர்., ஜெயலலிதா உருவாக்கிய உண்மையான இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதே எங்கள் நோக்கம். எங்களுக்கு அதிமுக என்ற கட்சி எதிரி இல்லை; எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் எதிரி. மேலும், தேவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்பது எங்கள் தேர்தல் வாக்குறுதி,” என்றார்.
செங்கோட்டையன் கூறுகையில், “எம்.ஜி.ஆர். எங்கள் வழிகாட்டி; ஜெயலலிதா எங்களை உயர்த்திய தலைவர். திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த ஒருங்கிணைவு அவசியம் என்று நான் முன்பே கூறியிருந்தேன்; அது இன்று நிறைவேறியுள்ளது,” என்றார்.
இந்த நிகழ்வு காரணமாக செங்கோட்டையனுக்கு அதிமுக தலைமையிலிருந்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தலைமை கருத்தை மதிக்காமல், கட்சிக்கு துரோகம் செய்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “என்னை அதிமுகவிலிருந்து நீக்கினாலும் எனக்கு மகிழ்ச்சிதான். அடுத்தகட்ட ஆலோசனைகளில் ஈடுபட்டு, அதுகுறித்து விரைவில் அறிவிப்பேன்,” என்று தெரிவித்தார்.