பெண் தொழிலாளர்களின் குளியலறையில் ரகசிய கேமரா – வடமாநில இளம்பெண் கைது!

Hidden camera in women batrhroom –one woman arrested!

ஓசூர், நவம்பர் 05:

பெண் தொழிலாளர்களுக்கான விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஓசூரில் செயல்படும் டாடா நிறுவனத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்கும் விடுதிக்குள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளியலறையில் பதிவுசெய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும், விடுதியில் தங்கியிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, நேற்று மாலை ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் பெண் தொழிலாளர்கள் விடுதி முன்பு கூடி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், “ரகசிய கேமரா வைத்தவரை உடனே கைது செய்ய வேண்டும், விடுதியில் கொடுமை புரியும் வார்டன்களை மாற்ற வேண்டும் மற்றும் மற்ற இடங்களிலும் கேமரா உள்ளதா என முழுமையாக சோதனை நடத்த வேண்டும்” என்று கோரினர்.

விடுதி வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரடியாக சென்று பேசினாலும், பெண்கள் கலைந்து செல்ல மறுத்து இரவெங்கும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில், விசாரணையின் அடிப்படையில் ஓசூர் காவல்துறை வடமாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் தொழிலாளியான நீலா குமாரி (23) என்பவரை கைது செய்தது. அவர் மறைமுகமாக குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தி, அதில் பதிவான வீடியோக்களைத் தன் ஆண் நண்பருக்கு அனுப்பியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வீடியோ பின்னர் இணையத்தில் வைரலாகியதால் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு காவல்துறை அதிகாரிகள் மெட்டல் டிடெக்டர் மூலம் விடுதியின் அனைத்து குளியலறைகளிலும் விரிவான சோதனை நடத்தினர். மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

அதிகாலை நேரத்தில் 400-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் உத்தனப்பள்ளி – ராயக்கோட்டை சாலையில் மறியல் நடத்த முயன்றனர். இதனால் போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்டது. பின்னர், போலீசார் அவர்களை அமைதிப்படுத்தி, கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, அதிகாலை 5 மணியளவில் போராட்டம் கலைந்தது.

தற்போது நீலா குமாரியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து அறிந்த பெண் தொழிலாளர்களின் பெற்றோர்களும் இன்று காலை ஓசூர் வந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. விடுதி வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை