சென்னை, ஜூலை 16:
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கேரளாவை ஒட்டிய தமிழக மாவட்டங்களில் மழை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில தினங்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த சூழலில், நாளை புதன்கிழமை சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 18-ஆம் தேதி கோவை, நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.