சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்படி, இன்று தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பும் உள்ளது.
வடக்கு வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்கிறது. இதனால் மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசா கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்த இந்த மண்டலம் இன்று அருகிலுள்ள கரையை கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் வரும் 30-ம் தேதி வரை இடி, மின்னல் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.