வாஷிங்டன், ஜூலை 16:
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடும் கனமழை பெய்ததால் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்த மழையால் பல நெடுஞ்சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். தேவையற்ற பயணங்களை தவிர்க்க சொல்லி எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனமழையின் தாக்கம் காரணமாக நியூயார்க் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் கூட வெள்ள நீர் புகுந்தது. இதனால் வழித்தடங்களில் பயணிகள் இருக்கை மேல் ஏறி நின்று பாதுகாப்பாக இருக்க முயற்சிக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அரசு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.