சென்னை, அக்டோபர் 25:
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
இந்திய வானிலை மையத்தின் அறிக்கையின்படி, இன்று தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிரதேசங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறது. நகரின் அதிகபட்ச வெப்பநிலை 30–31°C, குறைந்தபட்ச வெப்பநிலை 24–25°C அளவில் நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது .
மேலும், வடதமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் தென் ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும், சில இடங்களில் அது 65 கிமீ வேகம் வரை எட்டும் வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோர மாவட்டங்கள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதியிலும் காற்று மணிக்கு 35–45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை முன்னிட்டு, வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.