சென்னை, அக்டோபர் 10:
தமிழ்நாட்டில் நாளை 12,480 கிராமங்களில் ஒரே நாளில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவதாக ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் கிராம மக்களுடன் நேரடியாக உரையாடி, கிராமங்களில் தண்ணீர் வழங்கல், தெருவிளக்குகள், குப்பை அகற்றல் மற்றும் சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எழுபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்படும் இச்செயல்கள், ‘நம்ம ஊரு நம்ம அரசு’ திட்டத்தின் கீழ் செயலாக்கப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், கிராமசபை கூட்டங்களில் சாதிப் பெயர்கள் அல்லது அவமதிப்பூட்டும் பெயர்களைக் கொண்ட தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகளின் பெயர்களை மாற்றுவதற்கு மக்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஒரு கிராமத்தில் நலிவடைந்த குடும்பங்களை கிராம மக்கள் தேர்வு செய்து, அந்த முன்னுரிமை பட்டியலின் அடிப்படையில் குறைந்த வட்டியுடன் கடன்கள் மற்றும் பிற உதவிகள் வழங்கப்படும் என்றும் தகவல் வழங்கப்பட்டது.