மருந்து நிறுவனங்களை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு

Govt orders inspection of pharmaceutical companies in TN

சென்னை, அக்டோபர் 13:

இருமல் மருந்தால் குழந்தைகள் பலியான நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து நிறுவனங்களிலும் விரிவான ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அன்று (1.10.2025) பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், மத்தியப் பிரதேச மாநில மருந்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறைக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது.

அக்கடிதத்தில், 4.9.2025 முதல் மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்துக்கு தொடர்புடையதாக கருதப்படும் மருந்து, கோல்ட்ரிஃப் சிரப்(பாராசிட்டமால், ஃபீனைல்ஃப்ரைன் ஹைட்ரோகுளோரைடு, குளோரிபெனிரமைன் மெலேட் சிரப்),குறித்த விவரம் பெறப்பட்டது.

இது தொடர்பாக, அன்றைய தினமே (01-10-2025) சுமார் 4.00 மணியளவில், துணை மருந்துகட்டுப்பாடு இயக்குனரின் உத்தரவின் பேரில், முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் தலைமையிலான குழு, M/s. ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தில் ஆய்வுமேற்கொண்டனர்.

மேலும் 01-10-2025 அன்றே தமிழ்நாடு முழுவதும் சந்தேகத்திற்குரிய கோல்ட்ரிஃப் சிரப்(Coldrif Syrup) விற்பனை மாநிலம் முழுவதும் தடை செய்யப்பட்டது .

அக்குழு (01-10-2025 to 02-10-2025) மேற்கொண்ட தொடர் ஆய்வில் மருந்துகள் விதிகள், 1945-இன் கீழ் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு, சர்ச்சைக்குரிய மருந்தான கோல்ட்ரிஃப் சிரப் (Coldrif Syrup) Batch No: SR-13 உள்ளிட்ட 5 மருந்துகள் அவசர பகுப்பாய்வுக்காக எடுக்கப்பட்டு அரசு மருந்துகள் பகுப்பாய்வு கூடம், சென்னைக்கு அனுப்பப்பட்டது. பகுப்பாய்வின் முடிவில் டைஎதிலீன் கிளைகால் என்ற உயிர்க்கொல்லி நச்சு வேதிப்பொருள், கோல்ட்ரிஃப் சிரப்பில் 48.6 சதவீதம் (48.6% w/v) இருப்பதாக 02-10-2025 அன்று கண்டறியப்பட்டது.

மேலும், மேற்கூறிய நிறுவனத்திலிருந்து, ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு கோல்ட்ரிப் மருந்து விநியோகிக்கப்பட்ட தகவல் கிடைக்கப்பட்ட விபரம் பெறப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கும் இதுதொடர்பான தகவல்கள், 2-10-2025 அன்றே மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது.

இந்த சளி மருந்தில் டைஎதிலீன் கிளைகால் என்ற நச்சு வேதிப்பொருள் கண்டறியப்பட்டதால், 03-10-2025 அன்றே, ஸ்ரீசன் பார்மசியூட்டிகள், நிறுவனத்திற்கு பொதுநலன் கருதி மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்நிறுவனம் அதிகாரிகளால் உடனடியாக மூடப்பட்டது.

மேலும் தொடர் நடவடிக்கையாக ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து உரிமங்கள் முழுவதுமாக ஏன் ரத்து செய்யப்படக்கூடாது என விளக்கம் கேட்டு 03.10.2025 அன்றே குறிப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் முதல் உயிர் இழப்பு 04.09.2025 அன்று ஏற்பட்ட நிலையில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடுத் துறைக்கு 01.10.2025 அன்றே தகவல் அனுப்பப்பட்டது. இவ்வாறு, தகவல் பெறப்பட்ட 48 மணிநேரத்தில் தமிழ்நாடு அரசின் மருந்து கட்டுப்பாட்டு துறையால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அம்மருந்து நிறுவனத்தில் புலனாய்வு மேற்கொண்டு, சர்ச்சைக்குரிய மருந்தை ஆய்வுக்குட்படுத்தி, தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள மருந்துகளையும், தமிழ்நாட்டில் விற்பனையில் உள்ள மருந்துகளையும் தடைச்செய்து, அம்மருந்தில் விஷத்தன்மையுள்ள வேதிப்பொருள் டைதிலீன் கிளைகால் இருப்பதை கண்டறிந்து, அந்நிறுவனத்தின் மருந்து உற்பத்தியை உடனடியாக நிறுத்தி மூடப்பட்டு, மேல்நடவடிக்கையாக அந்நிறுவனத்தின் உரிமங்களை முழுமையாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டும், இம்மருந்து விநியோகம் செய்யப்பட்ட மாநிலங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவல்கள் அனைத்தும் மத்தியப் பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறைக்கும் உடனடியாக, 03.10.2025 அன்று மின்னஞ்சல் மூலமாக மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டது.

மேலும், 03.10.2025 அன்றே Drugs Controller General of India மற்றும் Deputy Drug Controller, South Zone, Chennai அவர்களுக்கும் விரிவான அறிக்கை மற்றும் அந்நிறுவனத்தில் உற்பத்தி நிறுத்திய ஆணை அனுப்பப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக coldrif syrup என்ற மருந்தின் ஆய்வு அறிக்கையில் கண்டறியப்பட்ட diethylene glycol 48.6 % நச்சு பொருள் இருந்ததன் காரணமாக அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்ற நடவடிக்கை எடுத்து அந்நிறுவன உரிமையாளர் தலைமறைவானதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்காக குற்ற குறிப்பாணை 07.10.2025 அன்று மருந்து ஆய்வாளர் மூலம் அந்நிறுவனத்தின் வெளிபுறமும், உரிமையாளரின் வீட்டின் கதவில் ஒட்டப்பட்டது. மேலும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள C-2 சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் புகார் கொடுக்கப்பட்டது.

தமிழ்நாடு காவல் துறையின் உதவியுடன் மத்திய பிரதேச சிறப்பு புலனாய்வு பிரிவு 09-10-2025 அன்று அதிகாலை சென்னை அசோக் நகர் பகுதியில் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன், (வயது 75) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அந்நிறுவனத்தில் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ஆய்வு முறையாக மேற்கொள்ளப்பட்டு இந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஆண்டில், உரிய ஆய்வு மேற்கொள்ளாத காஞ்சிபுரம் முதுநிலை மருந்துகள் ஆய்வாளர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இன்று (13-10-2025), ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை