ஜெர்மனி, நவம்பர் 17 :
சுற்றுச்சூழலைக் காக்கும் முயற்சியில் ஐரோப்பிய நாடுகள் உலகிற்கு முன்மாதிரியாக திகழ்கின்றன. அதன் முக்கிய அங்கமாக, ஐரோப்பிய ஒன்றியம் (EU) “கழிவு கட்டமைப்பு வழிகாட்டுதல்” (Waste Framework Directive) என்ற சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் படி, அனைத்து உறுப்புநாடுகளும் தங்கள் குப்பைகளை கட்டாயம் வகைப்படுத்தி சேகரிக்க வேண்டும். 2035-ஆம் ஆண்டுக்குள் நகராட்சி கழிவுகளில் 65% வரை மறுசுழற்சி செய்வதுதான் இதன் இலக்கு.
வீட்டிலேயே தொடங்கும் சுற்றுச்சூழல் பொறுப்பு , ஐரோப்பிய நாடுகளில் குப்பை மேலாண்மை வீட்டு அளவிலேயே தொடங்குகிறது. குப்பையை வெளியே வீசுவதற்கு முன், குடிமக்கள் அதனை வகைப்படுத்துகிறார்கள் — சமையலறைக் கழிவுகள், பிளாஸ்டிக் உறைகள், செய்தித்தாள்கள் என்பவற்றுக்குத் தனித்தனி பெட்டிகள் அமைக்கப்படுகிறது. இவ்வாறு பிரிக்கப்பட்ட குப்பைகள், குடியிருப்பு வளாகங்களுக்குப் பின்னர் வைக்கப்பட்டுள்ள நிறக் குறியீடு கொண்ட தொட்டிகளில் சேகரிக்கப்படுகின்றன.
நிறக் குறியீடுகள் மற்றும் அவற்றின் நோக்கம் :
- மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத் தொட்டிகள்: நெகிழி (Plastic), உலோகம் மற்றும் பேக்கேஜிங் பொருட்கள் (தகர டப்பாக்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவை).
- நீலம் நிறத் தொட்டி: காகிதம் மற்றும் அட்டைப்பெட்டிகள் (செய்தித்தாள்கள், கார்ட்டன் பெட்டிகள்).
- பழுப்பு அல்லது பச்சை நிறத் தொட்டிகள்:உயிரி கழிவுகள் — சமையலறைக் கழிவுகள் (மக்கும் குப்பை), உணவு எச்சங்கள் போன்றவை.
- பச்சை நிறத் தொட்டி (சில இடங்களில்):கண்ணாடி பாட்டில்கள்.
- சாம்பல் அல்லது கருப்பு நிறத் தொட்டி:மறுசுழற்சி செய்ய முடியாத மீதமுள்ள குப்பைகள்.
இந்த எளிய நிறக் குறியீடுகள் மூலமாக பொதுமக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நேரடியாக பங்கு பெறுகின்றனர்.
மறுசுழற்சியின் பலன்கள் :
இந்த முறையால் மறுசுழற்சி ஊக்குவிக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலில் கலக்கும் கழிவுகளின் அளவைக் குறைக்கிறது. இதனால் குப்பை மேலாண்மை ஒரு பெரிய தொழிலாக வளர்ந்து, புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகின்றன. மேலும், கழிவுகள் தேங்குவதைத் தடுத்து சுகாதாரப் பிரச்சினைகளைக் குறைக்கிறது. புதிய மூலப்பொருட்களின் தேவையும் குறைவதால் இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன.
சரியான சட்டங்கள் மற்றும் எளிய நிறக் குறியீடுகள் மூலமாக தூய்மையான, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை ஐரோப்பிய நாடுகள் தங்கள் செயல்மூலம் நிரூபித்துள்ளன.
– கலைவாசன்