சென்னை, செப்டம்பர் 25:
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது மனைவியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவி இடையிலான விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் தொடர்ந்து வருகிறது. இந்தத் தம்பதிகள் 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் மற்றும் அவர்களுக்கு ஆன்வி என்ற மகள் உள்ளார்.
கடந்த ஆண்டின் மே மாதம், ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி தங்கள் பிரிவை அறிவித்து, பிரித்து வாழ விருப்பம் தெரிவித்தனர். இதன்பின் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்தநிலையில் விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்தார்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கில் செப்டம்பர் 30-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.