தைலாபுரம், செப்டம்பர் 16:
பாமக கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பாமக மாநில தலைவராக உள்ள அன்புமணி மீது கடும் குற்றச்சாட்டுகளை எழுப்பினார். அவர் கூறியதாவது, அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 28-05-2025 அன்று முடிந்துவிட்டதால், அவருக்கு தற்போது எந்தவித தலைமை பதவியும் இல்லை என்று தெரிவித்தார்.
அன்புமணியின் பதவிக்காலம் முடிந்த பிறகு மாமல்லபுரத்தில் பொதுக்குழு கூட்டியதை கட்சியின் விதிகளையும், நிறுவனர் ராமதாஸின் அனுமதியையும் மீறியது எனக் கண்டித்தார். அத்தகைய செயற்குழு அல்லது பொதுக்குழு நடவடிக்கைகள் செல்லாது என்பதை அவர் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த 29-ஆம் தேதி நிர்வாகிகள் குழு கூடி ராமதாஸை தலைவராக தேர்ந்தெடுத்துள்ளதாக, அவர் நிறுவனர் மற்றும் தலைவராக சட்டப்படி அழைக்கப்படுவதையும் குறிப்பிட்டார். பதவிகள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட மனுக்கள் பதவிக்காலம் முடிந்த பிறகு செல்லாது என்றும் கூறினார்.
அன்புமணி தன் பாமக அலுவலக முகவரியைக் கோடங்கிபட்டி பகுதியிலிருந்து தேனாம்பேட்டை, பின்னர் தி.நகருக்கு மாற்றி, அந்த முகவரியை கொண்டு தலைவராக மோசடி செய்து வருவதாகவும் ஜி.கே. மணி தெரிவித்தார். இதன் காரணமாக தேர்தல் ஆணையம் அன்புமணி மீது கடிதம் அனுப்பியதையும், அன்புமணி ராமதாஸ், வடிவேல் ராவணன் மற்றும் திலகபாமா ஆகியோரைக் கருத்தில் கொண்டு மோசடி நடந்துள்ளதாக கூறினார்.