சென்னை, அக்டோபர் 31:
தமிழக அரசு, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் முதல்கட்ட பணிகளை வேகப்படுத்தியுள்ளது. இதற்காக மூன்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்த பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 20 லட்சம் மடிக்கணினிகளை கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் முதல் கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யும் பணியை எல்காட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
டெண்டர் நடைமுறைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, எச்பி, டெல், ஏசர் ஆகிய மூன்று பன்னாட்டு நிறுவனங்களுக்கு மடிக்கணினி தயாரிப்பு ஒப்பந்த ஆணை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் லேப்டாப் மாதிரி மற்றும் அதில் சேர்க்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அம்சங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து இறுதி ஒப்புதல் வழங்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இத்திட்டத்தின் மூலமாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கு தொழில்நுட்பக் கற்றல் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் லேப்டாப் வழங்கப்பட உள்ளது. இதற்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அரசு திட்டத்தின் கால அட்டவணைப்படி, வருகிற மார்ச் மாதத்திற்குள் மொத்த 10 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்படும். அதன் பின்னர் மாவட்ட வாரியாக கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக மீதமுள்ள 10 லட்சம் மடிக்கணினி விநியோகத்துக்கான இரண்டாம் கட்ட திட்டமும் இதனைத் தொடர்ந்து தொடங்கப்படும் என எல்காட் நிறுவனம் தெரிவித்துள்ளது.