ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் இன்று காலமானார். அவருக்கு வயது 81. கடந்த சில மாதமாக உடல் நலக்குறைவால் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று அவர் காலமானார்.
சிபு சோரனின் மறைவின் செய்தியை அவரது மகனும் ஜார்க்கண்ட் முதலமைச்சருமான ஹேமந்த் சோரன், “அன்பு திஷோம் குருஜி நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். இன்று நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் மாநில அரசியலில் சுமார் 40 ஆண்டுகள் செயல்பட்டு, அரசியலில் தனிச்சிறப்பு பெற்றவர் முன்னாள் முதல்வர் சிபு சோரன். சாந்தால் சமுதாயத்தைச் சேர்ந்த சிபு சோரன், பீகார் மாநிலத்தின் ராம்கர் மாவட்டத்தில் பிறந்தவர். 1972-ஆம் ஆண்டு ஏ.கே. ராய், பினோத் பிஹாரி மஹதோ ஆகியோருடன் இணைந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சியை நிறுவினார். 2000-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் தனியாக உருவாகும் முக்கியமான சமூக இயக்கத்தின் தலைவராகவும், காரணியாகவும் செயல்பட்டவர்.
சிபு சோரன் எட்டு முறை மக்களவைக்கும், இரண்டு முறையும் மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது இரண்டாவது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 1980-ஆம் ஆண்டில் முதல் முறையாக தும்காவில் மக்களவைக்கு தேர்வாகியதற்குப் பின் அந்த தொகுதியை JMM தலைமையிலான ஆட்சி கோட்டையாக மாற்றியிருந்தார். 2019-ம் ஆண்டு இத்தொகுதியில் அவர் பாஜக வேட்பாளரிடம் தோல்வியுற்றார். 2005-ம் ஆண்டு முதல் முறையாக ஜார்க்கண்ட் முதல்வராகப் பதவி ஏற்ற அவர், சட்டமன்றத்தில் நம்பிக்கைவாக்கெடுப்பில் வெற்றிபெற முடியாததால், ஒன்பது நாட்களில் பதவி ராஜினாமா செய்தார்.