விருதுநகர், ஜூலை 22:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நாரணாபுரம்-அனுப்பன்குளம் சாலையில் செயல்படும் பட்டாசு ஆலையில் நேற்று மாலை 3.30 மணியளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. 50 அறை கொண்ட இந்த ஆலையில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். விபத்தின் போது, பட்டாசு தயாரிப்பு அறையில் தயாரிக்கப்பட்ட வெடிகுடிப்பொருள்கள் எடுத்துச் செல்லும் வேலை நடந்து கொண்டு இருந்தது.
திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில், பள்ளபட்டி முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த கார்த்திகை செல்வம் (25), சிவசாமி என்பவரின் மனைவி சங்கீதா (43), குருசாமி என்பவரின் மனைவி லட்சுமி (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் அருகிலுள்ள மாரியம்மாள் (50), நாகலட்சுமி (55) ஆகியோர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கோர விபத்தில் ஆலையின் 4 அறைகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு, பட்டாசு ஆலையின் மேலாளர் பிரபாகரன், போர்மேன் செல்வகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஆலையின் உரிமையாளர் சீனிவாசன் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். இறப்புக்கான காரணங்கள் மற்றும் பாதுகாப்பு முறைகள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.