சென்னை, ஆகஸ்ட் 12:
தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6-ஆவது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைக்க கடந்த ஜூன் 16-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு 10-க்கும் மேலான நாட்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தின் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக வழக்கறிஞர் வினோத் அவசர முறையீடு செய்தார். அப்போது குறுக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “தூய்மைப் பணியாளர்களுக்கு அரசு ஆதரவாகவே செயல்படுகிறது; அவர்களை எதிர்க்கும் போலி பிம்பம் சில பிரிவுகளில் கட்டமைக்கப்படுகிறது” என விளக்கம் அளித்தார்.
மனுவில் சில குறைபாடுகள் இருப்பதாக நீதிபதி சுட்டிக்காட்ட, குறைபாடுகளைச் சரிசெய்து விதிமுறைப்படி மனுவை தாக்கல் செய்தால் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், தினந்தோறும் இதுபோல் முறையீடு செய்தால் மனு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது என எச்சரித்தார்.