ஈரோடு, நவம்பர் 26:
விவசாயிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்காதது ஏன்? என முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “தமிழக விவசாயிகளுக்கான நெல் ஈரப்பத விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை எடப்பாடி பழனிசாமி ஏன் சந்திக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியதுடன், “தன்னை விவசாயி என கூறிக்கொள்கிற அவர், உண்மையில் விவசாயிகளுக்கு துரோகம் செய்தவரே” என்று கடுமையாக தாக்கினார்.
டெல்லியில் பல கார்களை மாற்றி யாரையோ சந்தித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி, ஆனால் நெல் ஈரப்பதம் உயர்த்துவது போன்ற விவசாயிகளின் முக்கிய கோரிக்கையை பிரதமரிடம் வலியுறுத்த தயங்குகிறார் என முதலமைச்சர் குற்றம்சாட்டினார். “விவசாயிகளுக்காகச் செல்ல வேண்டுமென்றால், அவருக்கே கார் ஏற்பாடு செய்து அனுப்பத் தயார்” என்றும் பழனிசாமியை நையாண்டி செய்தார்.
பச்சைத் துண்டு அணிந்து கொண்டு “பச்சை துரோகம்” செய்கிறார் என ஏற்கனவே விமர்சித்தபோது, அதற்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசமடைந்ததாகவும், “இன்றும் அதையே மீண்டும் சொல்கிறேன், அவர் செய்தது அனைத்தும் விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே; மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொள்ளும் அவர், ஈரோட்டிற்காக என்ன செய்துள்ளார்?” என்றும் முதல்வர் கேள்வி கேட்டார்.
தமிழக வளர்ச்சியை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்ற எண்ணமே ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்களில் தெரிகிறது என விமர்சித்தார். தமிழர்களை தேசவிரோதிகள் போல சித்தரிக்க முயலும் ஆளுநர், அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை பயங்கரவாதிகள் உலாவும் மாநிலமாக காட்ட முயற்சிப்பது, அரசியல் சாசனப் பொறுப்புகளுக்கு முற்றிலும் ஒவ்வாத செயல் என்று அவர் கருத்து தெரிவித்தார்.
கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் தொடங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் மறுத்து குடியரசுத் தலைவரிடம் அனுப்பியிருப்பதும், தமிழ்மொழி குறித்து தமிழ்நாட்டுக்கு பாடம் எடுக்கும் போக்கு எடுத்திருப்பதும் ஏற்க முடியாது எனவும், “தமிழில் தேர்ச்சி பெற்றவர்கள் நாங்கள்தான்; எங்களுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை” எனவும் முதல்வர் வலியுறுத்தினார்.
மத்திய அரசும் தமிழ்நாட்டில் இருந்து வரி வசூலித்துக் கொள்ள மட்டும் முனைந்திருப்பதாகவும், அதற்குப் பதிலாக நலத்திட்டங்களுக்கோ, ரயில்வே போன்ற முக்கிய திட்டங்களுக்கோ போதிய நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் குற்றம்சாட்டினார். வடமாநிலங்களில் 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் திட்டங்கள் ஒப்புதல் பெறுகின்றன; ஆனால் தமிழ்நாட்டின் நியாயமான கோரிக்கைகளுக்கு தடைகள் உருவாக்கப்படுகின்றன என அவர் கூறினார்.
பஹல்காம் தாக்குதல், டெல்லி குண்டு வெடிப்பு போன்ற அசம்பாவிதங்கள் மத்திய ஆட்சிக்காலத்தில்தான் நடந்துள்ளன; இதற்கு மாறாக தமிழ்நாடு அமைதியான மாநிலமாக இருந்து வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்றார். தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கவே ஆளுநரை மத்திய அரசு நியமித்திருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.