சென்னை, செப்டம்பர் 06:
அதிமுக-வின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என ‘கெடு’ விதித்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாக கே.ஏ.செங்கோட்டையனும் எடப்பாடி பழனிசாமியும் இடையேயும் கருத்து மோதல்கள் மற்றும் பனிப்போர் நிலைவயப்பட்டிருந்தது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு-அவினாசி திட்ட பாராட்டு விழாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள் மேடையில் இடம் பெறவில்லாததால் செங்கோட்டையன் அந்த விழாவை புறக்கணித்தார். அதில் தொடங்கிய கருத்து மோதல் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் எதிரொலித்தது.
இதற்கிடையே கடந்த 1-ந்தேதி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செங்கோட்டையன் வருகிற 5-ந்தேதி (நேற்று) அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மனம் திறந்து பேச உள்ளேன் என கூறினார். இதனையடுத்து நேற்று 5-ஆம் தேதி காலை 10 மணிக்கு செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், அதிமுக-வில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் உரிய நடவடிக்கையை உடனடியாக 10 நாட்களுக்குள் தொடங்க எடப்பாடி பழனிசாமிக்கு கடுமையான ‘கெடு’ விதித்தார்.
இதனால் இன்று எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.