கோபி, செப்டம்பர் 23:
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சி பயணத்தில் ஈடுபட்டு வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலத்தில் இருந்து தனது பிரசாரப் பயணத்தைத் தொடங்கினார். இன்று காலை 7 மணியளவில் ஈரோடு மாவட்டம் பவானி வழியாக கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் அருகே வருகை தந்தார்.
காவுந்தப்பாடியிலிருந்து கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையம் வரை சாலையின் இரு பக்கங்களையும் அ.தி.மு.க கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ, கிழக்கு மாவட்ட செயலாளர் கே.சி. கருப்பணன் எம்.எல்.ஏ, ஜெயக்குமார் எம்.எல்.ஏ மற்றும் கோபி நகரச் செயலாளர் பிரிணியோ கணேஷ் தலைமையில் நடந்த வரவேற்பு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆயிரக்கணக்கான கட்சியினர், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தொகுதியில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்ததால் எடப்பாடி பழனிசாமி உற்சாகமாக காணப்பட்டார். சுமார் 30 நிமிடமாக கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் வரவேற்பை ஏற்று அதன் பிறகு அங்கிருந்து காரில் சத்தியமங்கலம் கிளம்பி சென்றார். அங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க ஒருங்கிணைப்பை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டார். இதையடுத்து உடனடியாக செங்கோட்டையன் வசித்து வந்த கட்சி பொறுப்புகளை பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்நிலையில் கோபி செட்டிபாளையம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கும் வகையில் நேற்று செங்கோட்டையன் சென்னை சென்று விட்டார்.