பிரபல இருசக்கர வாகன தயாரிப்பாளரான கவாசகி நிறுவனம், தனது நிஞ்ஜா ZX-6R ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஏற்பட்டுள்ள முக்கிய எஞ்சின் குறைபாட்டு காரணமாக இந்த மாடலை உலகளவில் திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, 2024 மற்றும் 2025 உற்பத்தி ஆண்டுகளுக்கான யூனிட்டுகள் மட்டுமே இந்த திரும்பப்பெறல் நடவடிக்கையில் உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிஞ்ஜா ZX-6R பைக்கில் உற்பத்தி நேரத்தில் பெரிய கிரான்ஸ்காஃப்ட் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிழை காரணமாக, பைக்கின் இன்ஜின் செயல்திறனும், பாதுகாப்பும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் கவாசகி இந்தப் பராமரிப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.
உலகளவில், அமெரிக்காவில் மட்டும் சுமார் 17,800 யூனிட்கள் இந்த கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் நிஞ்ஜா ZX-6R விற்பனை செய்யப்பட்டு வருவதால், அந்தந்த நாடுகளில் அதிகாரப்பூர்வ டீலர்களும் அறிவுறுத்தபட்டு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய சந்தையில் ZX-6R-ன் ரூ.11.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனையாகும் KRT எடிசன் மற்றும் 40வது ஆண்டு எடிசன் உள்ளிட்ட அனைத்து வேரியண்டுகளும் இந்த திரும்ப பெறும் நடவடிக்கைக்கு உட்பட்டதாக நிறுவனம் அறிவித்து உள்ளது.
இந்த பைக்கின் தற்போதைய உரிமையாளர்கள், கண்டிப்பாக பைக்கை ஓட்டுவதை தவிர்த்து, நிறுவனம் அறிவிக்கப்படும் வரை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும், மேலதிக தகவல்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட டீலர் மையங்களை அணுக வேண்டும் என்றும் கவாசகி வலியுறுத்தியுள்ளது.
நிஞ்ஜா ZX-6R மாடலில் 636சிசி இன்லைன்,4-DOHC எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 129 ஹெர்ஸ் பவர் மற்றும் 69 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்குகிறது, 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.உற்பத்தி தொழில்நுட்பக் குறைபாட்டால், சர்வதேச அளவில் பிரபலமான இந்த பைக்கை திரும்ப பெறும் நடவடிக்கையில் கவாசகி நிறுவனம் பயனர்களை பாதுகாப்பு முன்னேற்றமாக முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறது.