சென்னை, ஜூலை 10:
சென்னை ராயபுரத்தில் துணிக்கடையில் துணிகளை திருடிய ஊழியர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வருபவர் இம்ரான்கான், (30) இவர் அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த அவினாஸ் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 6 மாத காலமாக தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது அவினாஸ் மற்றும் கார்த்திகேயன் இருவரும் கடையிலிருந்து துணிகளை திருடி சென்றுள்ளனர். மேலும், அவினாஸ் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் கடையில் இருந்த பயோமெட்ரிக் வருகை பதிவேடு இயந்திரத்தை எடுத்து சென்று அதில் உள்ள பதிவுகளை அழித்து விட்டு, திரும்பவும் பயோமெட்ரிக் இயந்திரத்தை கடையில் கொண்டு வந்து வைத்துள்ளனர். இருவர் மீது சந்தேகம் அடைந்த கடையின் உரிமையாளர் இவர்களை கண்காணித்து வந்துள்ளார். அப்போது இருவரும் கடையில் இருந்த துணிகளை திருடிச் செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து கடையின் உரிமையாளர் இம்ரான் கான் அவினாஸ் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இவர் மீதும், ராயபுரம் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள துணிகளை திருடியது தெரிய வந்தது. திருடி சென்ற துணிகளை மீட்ட போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய சிறையில் அடைத்தனர்.