அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிரான மோதலை அடுத்து, பெரும் தொழிலதிபர் எலன் மஸ்க், அமெரிக்காவில் புதிய கட்சியை தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், அமெரிக்காவின் பெரும் தொழிலதிபருமான எலன் மஸ்க், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், டொனால்ட் டரம்ப்புக்கு வலதுகரமாக செயல்பட்டு, அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு, எலன் மஸ்க்கை தனக்கு நெருக்கமாக வைத்துக் கொண்டதுடன், நிர்வாகத்தில் செலவுகளை குறைக்க தனித் துறையை உருவாக்கி, அதற்கு அதிகாரியாக மஸ்க்கை நியமித்தார். அதன்படி, மேம்பாட்டுத் துறை எனப்படும் DOGE-ன் தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார். வரி மற்றும் செலவு குறைப்பு மசோதாவில் ட்ரம்ப் கையெழுத்திட்ட பிறகு, அதனை மஸ்க் விமர்சித்தது, இருவருக்கும் இடையேயான விரிசலை ஏற்படுத்தியது. பின்னர் DOGE-ன் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், இருவருக்கும் இடையே பரஸ்பர மோதல் போக்கு உண்டானது. இப்படியாக அமெரிக்க அதிபருடனான மோதலைத் தொடர்ந்து, தற்போது அமெரிக்க கட்சி என்ற பெயரில், எலன் மஸ்க் புதிய கட்சியை தொடங்கி இருப்பது அந்நாட்டில் பேசுபொருளாகியுள்ளது. வீண் விரயம் மற்றும் ஊழலால் நாடு திவாலாகும்போது, ஒரு கட்சி முறையில் வாழ்வது ஜனநாயகம் அல்ல என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்க மக்களுக்கு சுதந்திரத்தை திருப்பி அளிப்பதற்காகவே, தான் புதிய கட்சி தொடங்கி உள்ளதாகவும் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்