சென்னை , செப்டம்பர் 10:
வேளச்சேரியில் உள்ள தொழிலதிபர் அமீத் பிஸ்னாய்க் சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வேளச்சேரி குல்மோகர் அவென்யூவில் வசித்து வரும் அமீத் பிஸ்னாய்க்கு சென்று, இரண்டு கார்களில் வந்த 8 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கமான கட்டுமான பணிகள் மற்றும் பண பரிவர்த்தனை மோசடிகளில் ஈடுபட்டதாக தகவல்கள் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமீத் பிஸ்னாய்க் விமான நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பும் இவர் சொந்தமான சொத்து மற்றும் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு இருந்தது. தற்போதைய சோதனைகள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடைபெறக்கூடும் என்றும், சட்டவிரோத பண பரிமாற்றங்களுக்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்று, அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையார் காந்திநகர் மற்றும் மேற்கு மாம்பலம் ராஜி தெருவில் உள்ள சுப்பிரமணி ராமச்சந்திரன் வீட்டையும் சோதனை செய்ய சென்றனர்; ஆனால் வீட்டில் யாரும் இல்லாததால் மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பி சென்றனர்.