சென்னை, ஜூலை 19:
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுயிருப்பதாவது,
பொய்யான வாக்குறுதிகள் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த நான்கு ஆண்டுகளாகப் பொதுமக்களை வஞ்சிப்பதையே தொழிலாக வைத்திருக்கிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு முதல், பள்ளிக் கல்வித்துறையில் இசை, ஓவியம், தையல், உடற்பயிற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளில், பகுதி நேரச் சிறப்பு ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்த 12,000க்கும் அதிகமான ஆசிரியர்களை, ஆட்சிக்கு வந்ததும் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று, தனது தேர்தல் வாக்குறுதி எண் 181ல் கூறிய திமுக, கடந்த நான்கு ஆண்டுகளாக ஏமாற்றி வருகிறது.
ஒவ்வொரு முறை ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கும்போதும், பொய்யான நம்பிக்கை கொடுத்து ஏமாற்றி வருகிறது திமுக அரசு. ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையால், ஒவ்வொரு முறையும் ஆசிரியப் பெருமக்கள், தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்பும்போதும், அவர்கள் கோரிக்கையை அத்தோடு மறந்து, விளம்பர ஷூட்டிங்கில் நடிக்கச் சென்று விடுகிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ்.
முதலமைச்சர் தொடங்கி, ஒட்டு மொத்த திமுக அமைச்சர்களும், சிலை வைப்பது, பெயர் வைப்பது என, ஊடகங்களில் ஒரு நாள் தலைப்புச் செய்திக்காக அலைந்து கொண்டிருக்கிறார்களே தவிர, உண்மையான மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக, அற வழியில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிக் கொண்டிருக்கும் பகுதி நேர ஆசிரியப் பெருமக்களுக்கு திமுக அரசின் பதில் என்ன?
வாக்களித்த மக்களை வஞ்சிப்பது திமுகவுக்குப் புதிதல்ல என்றாலும், நாட்டின் எதிர்காலமான மாணவர்களைச் சிறந்தவர்களாக உருவாக்கும் அறப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களை, இப்படி தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் அவல நிலையில் வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
உடனடியாக, பகுதி நேர ஆசிரியப் பெருமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.