திருவாரூர், நவம்பர் 24:
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை மத்திய அரசு உயர்த்த மறுத்ததை கண்டித்து, திருவாரூரில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது.
இதையடுத்து, மத்திய அரசின் முடிவைக் கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் நேற்று தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்தின. அதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூரிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும், பெருமளவு விவசாயிகளும் கலந்து கொண்டு கோஷமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.