டெல்லி, ஜூலை 21:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மொத்தம் 21 அமர்வுகளுக்கான இந்த கூட்டத் தொடரில் ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தினம் போன்ற திருவிழாக்களின் காரணமாக ஆகஸ்ட்12 முதல் 18-ம் தேதி வரை இடைவெளி விடப்பட உள்ளது.
இந்த கூட்டத் தொடரில் மத்திய அரசு முக்கியமான பல மசோதாக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. அதேசமயம், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முக்கிய விவகாரங்களை எழுப்பும் நிலையில், ஆபரேஷன் சிந்தூர், டிரம்பின் சமீபத்திய குற்றச்சாட்டு, பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு வாக்காளர் திருத்தம் உள்ளிட்ட விஷயங்களில் மத்திய அரசை கடுமையாக விவாதித்து வருகின்றனர்.
இந்நிலையில், கீழடி அகழாய்வின் ஆய்வறிக்கையை வெளியிடுவதில் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக குற்றம்சாட்டி, மாநிலங்களவையில் திமுக குழுத்தலைவர் திருச்சி சிவா, அவையை ஒத்திவைத்து ஆலோசனை நடத்தக் கோரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
கீழடி அகழாய்வில் கிடைத்த முடிவுகள் தமிழர்த் தொல்லியலுக்குப் பெரும் சாதனை என மதிப்பிடபட்டு வருகின்ற நிலையில், இதன் முழுமையான ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்பதே திமுக மற்றும் தமிழக உறுப்பு உறுப்பினர்களின் வலியுறுத்தலாக இருக்கிறது.